Friday, July 29, 2016

இயற்கை வழி மானாவாரி விவசாய கருத்தரங்கு

...விதைகளே பேராயுதம்...

தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பு :
       வானகம் ( நம்மாழ்வார் உயிர்சுழல்  நடுவத்தின் குமார் ஐயா, ஏங்கல்ஸ்ராஜா, மற்றும் குமரவேல் ஐயாவின் ) வழிக்காட்டுதலில் விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகளை உள்ளக்கிடய தேன்கனி தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.  நம்மாழ்வார் ஐயாவுடன் இணைந்து  கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பல அமைப்புகளுடன் செயல்பட்டு வந்தாலும் , தன்னுடைய தனித்த தன்மையான நோக்கத்திற்காக 3வது ஆண்டாக கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறது.
        தேன்கனியானது விவசாயிகள் , இளைஞர்கள், சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என பல தரப்பட்டவர்களிடையே தேன்கனி இயற்கை விவசாய கூட்டமைப்பு, தேன்கனி வாழ்வியல் மையம் ( பயிற்சி மையம்) , தேன்கனி உழவர் வார சந்தை, தேன்கனி பாரம்பரிய அறுசுவை ருசியம், தேன்கனி மாடி வீட்டுத்தோட்டம், தேன்கனி வாழ்வியல் பள்ளி, தேன்கனி உழவர் பாரம்பரிய விதைகள் என்று பல வழிகளில் இயற்கை விவசாயிகளை தலைமையாகக் கொண்டு  நம்மாழ்வார் ஐயாவின் கொள்கையால் களப்பணியாற்றி வருகிறது.
       இதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு நாள் இலவச இயற்கை விவசாய மற்றும் மாடித்தோட்டப் பயிற்சிகள் 15ம் , மூன்று நாள் விவசாய, ஆடம்பரமில்லா இயற்கை அங்காடி & உணவகம் சார்ந்த கட்டணப் பயிற்சி 17ம் நடத்தி உள்ளது.
       விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே  நேரடித் தொடர்பை ஏற்படுத்திய தேன்கனி உழவர் வார சந்தை 115 வாரங்களைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது.

மானாவாரி & இயற்கை விவசாயப் பயிற்சி :
       தன்னுடைய பயணத்தின் தொடர்ச்சியாக வானகம் ( நம்மாழ்வார் உயிர்சுழல்  நடுவத்தின் குமார் ஐயா மற்றும் ஏங்கல்ஸ்ராஜா, குமரவேல் ஐயாவின் )  ஒத்துழைப்பில் விருது நகர் மாவட்டத்தில் உள்ள இளைஞர் அமைப்புகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி ஒவ்வொரு கிராமத்தையும் நம்மாழ்வார் ஐயாவின் இறுதி லட்சியமான வாழும் கிராம்மாக உருவாக்கும் பணியை மேலும் விரிவுபடுத்த முடிவு எடுத்திருந்திருந்தது.
          அதன் செயல்படுத்தும் விதமாக புலிப்பாறைப்பட்டி இளைஞர்களான செல்வக்குமார் ,செந்தில் மற்றும் ஊர் இளைஞர்களுடன் இணைந்து மானாவாரி & இயற்கை விவசாயப் பயிற்சியை சிவகாசியை அடுத்த புலிப்பாறைப்பட்டியில் ஏற்பாடு செய்திருந்தது.
         பயிற்சியில் 20வயதிலிருந்து 40வயதுள்ள 60 இளம் விவசாயிகளும், 40வயதிற்குள் மேலான 25  விவசாயிகளும், 10பெண்களும் கலந்து கொண்டிருந்தனர். தேன்கனியின் விவசாயிகள் நிர்வாகிகள் , உறுப்பினர்கள் என 24பேர் கலந்து கொண்டனர்.

காலை உணவு :
       மானாவாரி பகுதி என்பதாலும் மானவாரி பயிற்சி என்பதாலும் காலையில் நாட்டுக்கம்பு & கேழ்வரகில் செய்த கூழ் காலை உணவாக அளிக்கப் பட்டது. உணவினை புலிப்பாறைப்பட்டி இளைஞர்களான செல்வக்குமார் & செந்திலின் தாய் மற்றும் சித்தி சமைத்திருந்தாகள்.

நிகழ்வு :
    புலிப்பாறைப்பட்டிக்கு வருகை தந்திருந்தவர்களை செல்வக்குமார் அவர்கள் வரவேற்றார். பின்னர் ஊர் பெரியவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தேன்கனியின் நிறுவனர் த.ஞானசேகர் ஐயா அவர்கள்  நம்மாழ்வார் ஐயாபற்றி கூறி நிகழ்சியை வழி நடத்தினார்.
        பின் ஜெ.கருப்பசாமி வானகம் பற்றியும் , குமார் ஐயா மற்றும் ஏங்கல்ஸ்ராஜா, குமரவேல் ஐயா பற்றியும் இன்றைய சூழலில் மானாவாரி விவசாயத்தின் அவசியம் பற்றியும் தன்னுடைய அனுபவத்தை கூறினார். சிவரக்கோட்டை ராமலிங்கம் ஐயா அவர்கள் மானாவரியின் தேவையைப் பற்றியும் , விவசாயத்தின் நெருக்கடி பற்றியும் எடுத்துரைத்தார்.

பூச்சி நீ.செல்வம் :
       பின்னர் தொடர்ந்த பூச்சியல் துறை வல்லுணர். செல்வம் அவர்கள் பூச்சிக் கொல்லிகளின் தீங்கு பற்றி மிகத்தெளிவாக விளக்கினார். குறிப்பாக பூச்சிகொல்லி என்கிற உயிர்கொல்லி மற்றும் வீட்டில் பயன்படுத்தும் கொசுவிரட்டியின் பாட்டில்களில் குறிப்பிட்டிருக்கும், சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை நிறங்களை விலக்கி அதன் தீமைகளை  கூறும் போது அனைவரின் நெஞ்சிலும் பகிர் என்றது.
      பின் ஒன்றாம் தலைமுறை பூச்சிக் கொல்லி தொடங்கி இந்தியாவில் பயன்பாடில் இருக்கும் ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லி வரையிலான அழிவுகளின் எதிரிரொலியே தெருவுக்குத்தெரு கருத்தரிப்பு மையங்கள், மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, சத்துக்குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் என விளக்கினார்.
   வெளி நாடுகளில் ஏழாம் தலை முறை பூச்சிக்கொல்லிகளே புழக்கத்தில் வந்துவிட்டது எனவும் அதனை நமது மீது திணிக்க வேலைகள் நடந்து வருகிறது எனவும் உண்மை எடுத்துரைக்க இரசாயண விவசாயம் இதுவரை செய்து வந்திருந்த விவசாயி ஒருவருக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டது.
       பின்னர் பூச்சிகளின் நண்பர்களை வகைப்படுத்தி, பூச்சிகளை விரட்டுவது பற்றியும் கூறினார். பின் விவசாயிகளின் கேள்விகளான  களைக்கொல்லி, மரபணு பருத்தி, மக்காசோளம், சோயா ஆகியவற்றின் தீமைகளை எடுத்துரைத்தார்.

மதிய உணவு :
    பெரும்பாலான நிகழ்ச்சிகள் எல்லாம் அரசு அல்லது ஏதாவது தொண்டு நிறுவனம் , தனியார் விளம்பர நிறுவனம் நிதி உதவி அளித்து நடைபெறும். ஆனால் வானகம் & தேன்கனி நடத்தும் நிகழ்ச்சிகள் விவசாயிகள், பொதுமக்கள் பங்களிப்பில் மட்டுமே நடைபெறும் என்பதற்கு மற்றுமொரு நிருபனமாக இந்த நிகழ்ச்சியும் அமைந்தது.
           தாழமுத்து வாழ்வியல் பண்ணை விவசாயி சிறுதானிய அரிசியும், மற்றொருவர் செக்கு எண்ணெயும், கீரை ஒருவர், முருங்கக்காய், கத்தரிக்காய் என ஒருவர், தேன்கனி ருசியக பெண்கள் சமையல், உள்ளூர் குழந்தைகள் , பயிற்சிக்கு வந்திருந்தவர் சமையல் கைக்பக்குவமும் என ஒவ்வொருவர் உழைப்பிலும் மதிய உணவாக வரகு சாம்பார் சாதம், தயிர்சாதம்,  நாட்டு கத்தரிக்காய் பொறிக்கறி, கீரை கூட்டு, மிளகார் குழம்பு என இயற்கை உணவியல் நிபுனர் ஞான சேகரன் ஐயா மேற்பார்வையில் அசத்தி விட்டனர்.


இயற்கை வேளாண் தொழில்நுட்ப ஆலோசகர் திரு. ஏகாம்பரம் :
        திரு. ஏகாம்பரம் அவர்கள் இயற்கை விவசாயத்தின் சிறப்புகள் பற்றியும் அதனால் பயன் அடைந்தவர்கள் பற்றியும் எடுத்துரைத்தார். பின் மானாவாரிப் பயிர்களின் பருவங்கள் , பட்டங்கள் பற்றியும், இயற்கை உரம் தயாரிப்புப் பற்றியும் விளக்கினார்.
       தமிழ் நாட்டில் இயற்கை விவசாயத்தின் மூலம் வெற்றி அடைந்த பண்ணைகளைக் கூறினார்.

தேன்கனி விவசாயி.  நாராயணன் & முனியசாமி :
       மானாவாரியில் வாழனும்னு ஆரவமும் , விருப்பமும் இருந்தால் போதும் மகிழ்ச்சி கிடைக்கும். பின்னர் களத்தில் இறங்கி வேலை செய்தால் எளிமையாக கற்கலாம் என இளம் விவசாயி முனியசாமி அனைவருக்கும்  தனக்குள் ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையையும், தான் கற்ற அனுபவத்தையும் கூறினார்.

தேன்கனி உழவர் சந்தையின் வெற்றி :
        நேரடியாக சந்தைப்படுத்தும் போது தனக்கு கிடைத்த அனுபவமும், அதனால் தான் அடைந்த பயனும் தேன்கனி உழவர் சந்தையின் வெற்றி குறித்தும் விவசாயி நாராயணன் அவர்கள் பகிர்ந்து கொண்டார்.
  
வாழும் கிராமம் செல்வக்குமார் :
      புலிப்பாறைப் பட்டியை வாழும் கிராமக மாற்றி வரும் இளம் வயது செல்வக்குமார் தான் பெற்ற அனுபவத்தையும் அதன் ஏற்பட்ட பலனையும் விவரித்தார். மேலும் நீர் மேலாண்மையின் அவசியத்தையும் அதனை சரி செய்ததால் கடந்த ஆண்டு தன்னுடைய ஊரின் ஆறு, குட்டை, கிணறுகளில் பல வருடங்கள் கழித்து நீரைத் தேக்கிய அனுபவத்தையும் விளக்கினார்.

வாழ்வியல் மருத்துவம் :
         செந்தில் அவர்கள் மருந்தில்லா மருத்துவம் பற்றியும், குழந்தைகளுக்கான வாழ்வியல் கல்விபற்றியும் விளக்கினார். பின் நிகழ்விற்கு வந்திருந்தவர்களும் தன்னுடைய வாழ்வியல் அனுபவங்களை விளக்கினார்கள்.

தேன்கனி உழவர் சந்தை & பாரம்பரி விதைகள் :
     பின்னர் தேன்கனி உழவர்களின் பாரம்பரிய விதைகள் & உணவுகள் கண்காட்சிக்கு வைக்கப் பட்டது.  நிகழ்வில் வானகத்தின் சுக்கு, மல்லி, ஆவாரம் பூ தேநீர் காலை மாலை அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மழை பாடல் பாடி விழா இனிதே நிறை உற்றது .


115வது தேன்கனி உழவர் சந்தை :
      நிகழ்விற்கு வந்த நண்பர்கள் சிலர் மறுநாள் ஞாயிறு காலை தேன்கனியின் வார சந்தையில் கற்றனர்.
  நிகழ்விற்காக ஒத்துழைத்த  முகநூல் & வாட்ஸாப் நண்பர்கள், ஊடக, செய்திதாள்கள் மற்றும் பசுமைவிகடன் கார்த்திக் போன்றவர்களுக்கும் , மரபுவிதை நாடோடிகள் அமைப்பினருக்கும் தேன்கனியின் மனமார்ந்த நன்றிகள் .

தேன்கனியின் இயற்கைப் பயணம் தொடரும்....























...விதைகளே பேராயுதம்...

Thursday, July 28, 2016

தேன்கனி வாழ்வியல் மையம்

தேன்கனி வாழ்வியல் மையம் மற்றும் மரபு விதை நாடோடிகள் சார்பாக விருதுநகரில் நடைபெற்ற கருத்தரங்களில் மரபுசுவை மற்றும் உடல் சார்ந்த புரிதல் பற்றி நிகழ்வு ந்டைபெற்றது....

அந்நிகழ்வு பற்றி தகவல்கள் .....





மரபு விதை நாடோடிகள் - சூலை மாத ஒருங்கிணைவு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (17/06/16) மாலை நமது 'மரபு விதை' அமைப்பின் சூலை மாத ஒருங்கிணைப்புக் கூட்டம் இயற்கையின் - (மழை) ஆசிர்வாதத்துடன் இனிதே நடைப்பெற்றது.( இவ்வளோ வேகமாக பகிர்கின்றீர்களே ? - காதில் கேட்கிறது). மாலை 4 மணிக்கு திட்டமிட்டக் கூட்டம் மழையினால் 5 மணிக்கு தொடங்கப்பட்டது. 'மரபு விதை' குடும்பத்தினர் சுமார் 25 நபர்கள் கலந்துக் கொண்டனர். 
நிகழ்வின் தலைப்பு 'உடலுக்கு எல்லாம் தெரியும்' மற்றும் 'மரபுச்சுவை'. உடல் நலம் பற்றிய கலந்துரையாடலை புலிப்பாறைப்பட்டி தொடுச்சிகிச்சையாளர் திரு.செந்தில்குமார் முன்னெடுத்துச் சென்றார். உடல் பற்றிய அடிப்படை புரிதல்கள், நோய் மற்றும் அறிகுறிகள் பற்றிய விளக்கம், அதற்கான தீர்வுகள் என அமைந்தது, அனைவரும் ஆர்வத்துடன் கேள்விகள் கேட்டு பங்குபெற்றனர். திரு.செந்தில்குமார் மற்றும் அவரது சகோதரர்Selvakumar Alagarsamy இருவரும் அவர்களது கிராமத்தில் ஐயா நம்மாழ்வாரின் வழி பல ஆக்கப்பூர்வமான செயல்களை செய்துவருகின்றனர். 'வாழும் கிரமாம்' ஆக தனது கிராமத்தை மாற்ற வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு 'புலிப்பாறைப்பட்டி நண்பர்கள்' என்ற அமைப்பினை வழிநடத்திச் செல்கின்றனர். மரபுச்சுவை பற்றிய கலந்துரையாடலை முன்னெடுத்துச் சென்ற அண்ணன். முத்துக்குமார், தேன்கனி வாழ்வியல் மையம், சிவகாசி, தனது அனுபவத்தின் வாயிலாக உணவு பழக்கங்கள் பற்றியும், இன்றைய நாளில் உணவுப்பொருட்களில் கலக்கும் நச்சுப் பொருட்கள் பற்றியும் விளக்கினார். பாரம்பரியமாகவே மதிப்புக்கூட்டல் பொருட்கள் செய்துவரும் முத்துக்குமார் அவர்கள் சிறுதானியங்களில் நொறுக்கு தீனிகள் செய்வது பற்றியும், கடலை எண்ணெயின் முக்கியதுவம் பற்றியும் கூறினார். அடுத்ததாக நண்பர் கார்மேகம், Thenkani vazhviyal maiyam , சிவகாசி, அவர்கள் 115 வாரங்களாக உழவர்களின் நேரடி சந்தை நடந்துவருவது பற்றியும், அதில் மக்களிடம் தனக்கு கிடைத்த அனுபவம் பற்றியும் எளிய நடையில் விளக்கினார். அதே வேளையில் மதுரையிலிருந்து குடும்பத்துடன் கலந்துக் கொண்டு சிறப்பித்த அண்ணன் Surendran Nath அவர்கள் மனம் பற்றிய விசயங்களை எடுத்துக் கூறியது அனைவருக்கும் பிடித்திருந்து, உழவர்களின் நேரடி சந்தையை உருவாக்கும் தொடக்கமாக செக்கில் ஆட்டிய எண்ணெய்கள், சர்க்கரை, கருப்பட்டி மற்றும் சிறுதானிய நொறுவைகள், இயற்கை வாழ்வியல் பற்றிய புத்தகங்கள் என சந்தைபடுத்தப்பட்டன, அனைத்தும் இயற்கை வழி முறையில் தயாரிக்கப்பட்டு, அதை தயாரித்த நபர்களாளே நேரடியாக சந்தையும் படுத்தப்பட்டது, உழவர்களின் நேரடி தளமாக செயல்படுவதே நம் அமைப்பின் நோக்கம்.. நிகழ்வினை ஏற்பாடு செய்து, சிறப்புடன் நிறைவு செய்தது வரை அனைத்துவகையிலும் உறுதுணை செய்யத நண்பர் Saravanan Balasubramanian க்கு நன்றிகள்.
தமக்குள் நிகழ்வின் பொருளாதார அம்சங்களை பங்கிட்டுக் கொண்ட Prof.R.சண்முகவேல், Prof.P.K.Periyasami raja, Menakai KannanAmutha Sargurunathan & சற்குருநாதன் மற்றும் Saravanan balasubramanian அனைவருக்கும் அன்பும் நன்றியும், மானாமதுரை சீமை யிலிருந்து கலந்துக் கொண்ட அன்பர்களுக்கும் நன்றி. அடுத்த மாதத்திற்கான நிகழ்வு விரைவில் அறிவிக்கபடும்..