Wednesday, February 7, 2018

கர்வம் கொள்கிறேன்,
காட்டுக் கம்பே உன்னால் !

Image may contain: 2 people, people smiling, outdoor and nature
என்னை தலைநிமிரச் செய்த உன்னால் !!
நான் கர்வம் கொள்கிறேன் !!!
அனுபவப் பகிர்வு :
ஜெ.கருப்பசாமி
ச.முனியசாமி
பார்த்து பார்த்து விதைத் தேர்ந்தெடுத்து,
பருவம் பார்த்து பல பல உழவு செய்து,
கிடை போட்டு, எரு கொட்டி,
வரப்பு உயர்த்தி, வாய்க்கால் கட்டி,
நீர் பாய்ச்சி, நாற்றாங்கால் தயாரித்து,
நீர் கட்டி, தொலி கலக்கி,
இடைவெளி விட்டு கயிறு பிடித்து, நாற்று நட்டி,
விழிமேல் விழி வைத்து ஆற்றிலோ அல்லது
கிணற்றிலோ நீர் வந்திடாத ?
என ஏங்கி, வந்த நீரை வரப்பு உயர கட்டி,
இயற்கை உரம் தெளித்து, பூச்சு விரட்டி,
களையெடுத்து, பால் பிடிக்க,
அறுவடை வரை நிலம் காயமல் நீர் கட்டி,
மழை, பனி, வெயில்பாராமல் மாதங்கள் பல பாதுகாத்து,
ஆள் உயர வளர்ந்த நெல்லே !
என் பாரம்பரிய நெல்லே !
உன்னை வளர்க்க நன்செய் நிலத்தில்
இவ்வளவு உழைப்பு செய்ய வேண்டி இருக்கு !
ஆனால் என் புஞ்சை விவசாயியோ,
பெய்த மழையை மட்டுமே மூலமாக வைத்து...
பாதுகாத்து வைத்த காட்டுக் கம்பு தானியத்தை
பருவத்தில் சில உழவு மட்டுமே செய்து,
ஆவணி மழையில் விதை விதைத்து,
தை மாதத்தில் ஆள் உயர ( 9முதல் 11அடிவரை கூட )
ஓங்கி உயர்ந்து வளர்ந்து கிளையடித்து ( 100 தூர்வரை கட்டி)
கதிராகி அறுவடைக்கு தயாராகி விட்டாயே !!
நெல் விவசாயி போல்
உனக்கு நான் கிடை உட்பட, எரு கூட கொட்டவில்லை,
இயற்கை உரமோ, பூச்சி விரட்டியோ தெளிக்க வில்லை...
துளியும் நான் நீர் கட்டவோ, பாய்ச்சவோ இல்லை,
களையும் எடுக்கவில்லை...
நான் நெல் விவசாயி போல்,
உனக்கு அதிகம் செலவும் செய்யவில்லை, உழைக்கவில்லை..
பெரிய மழையும் இல்லை...
பருவத்தில் விதைத்தோம்!
பருவத்தில் அறுத்தோம் !!
ஆனால் நீயோ அந்த பாரம்பரிய நெல்லையும் விட
( மாப்பிள்ளை சம்பா உட்பட ) உயர்ந்து ஓங்கி செழித்து விட்டாயே...
இன்று என் குடும்பம் உட்பட , அனைத்து உயிருக்கும் உணவும் படைத்துவிட்டாயே....
மானவாரித் தானியங்களான காட்டுக் கம்பு உட்பட
உன்னை தொலைத்து விட்டு !
உன்னை மறந்து விட்டு !
உன்னை உணவில் புறந்தள்ளி விட்டு,
இச்சமூகம் மீளவும் ,
எதிர்காலத்தில் சுயசார்பு வாழ்க்கை வாழ்ந்திடவும்
வேறு வழி உண்டோ ???...
உன்னைப் ( காட்டுக் கம்பு)
பயிர் செய்தமையால்
தலைநிமிர்ந்து பார்க்கிறேன்....
உன்னைப் ( காட்டுக் கம்பு)
பகிர்ந்து உண்டு வாழ்வதால், நான்
தலைநிமிர்ந்து வாழ்கிறேன்..
ஆகையால் காடுக்கம்புத் தானியமே ,
( மானாவாரிப் பயிர்கள் அனைத்தும் உட்பட) உன்னை பயிர்செய்து வாழும் நான், பாடுபட்டு நன்செய் நெல் பயிர்செய்யும் மற்றவர்களை,
உன்னோடு ஒப்பிட்டு நினைத்துப் பார்க்கும் போது,
எனக்குள் கர்வம் கொள்ளத் தோணுகிறதே ! ...
ஆனாலும் முடியவில்லை..
இச்சமூகம் விழித்தெழ...
எங்களிடமும் ஓர் ஆயுதம்
( மானாவாரி விதை) உள்ளது என என்னும் போது,
எங்களோடு கரம்பிடித்து,
கைபற்றிப் பயணப் பட விரும்புபவர்களை
அன்போடு வரவேற்கிறோம்....
காட்டுக் கம்பே !!
உன்னால் தலைநிமிர்ந்து நிற்கிறோம்....
நன்றி : நம்மாழ்வார் ஐயா, வானகம் நல் வழிகாட்டிகள் & தேன்கனி மானாவாரி உழவர்கள்......