Saturday, November 12, 2016

ஊரெங்கும் ஊர் சந்தைகள் பயிற்சி முகாம் :


( தேன்கனி மற்றும் வானகம் கல்விக்குழு இணைந்து
3நாள் பயிற்சி முகாம் : நவம்பர் 25 முதல் 27வரை, 2016 )

நகரங்களிலிருந்து கிராமங்களை நோக்கி இயற்கை வாழ்வு வாழ நினைப்பவர்களுக்கும், நகரத்தில் தற்போது சிக்கலான சூழலில் வாழ்ந்தாலும் எதிர்காலத்தில் இயற்கை வாழ்வு வாழ விரும்புபவர் களுக்கும், இயற்கை விவசாயம் செய்து வருபவர்களின் வாழ்வாதரத்தை இன்னும் ஒருபடி உயர்த்துவதற்கான பதிவு இது.
நம்மாழ்வார் ஐயா போன்ற பலரின் கடும் உழைப்பிற்குப் பின்னால் இயற்கை வழி விவசாயம் பெரும் அளவு வளர்ச்சி கண்டுள்ளது. இத்தகைய சூழலில் விவசாயிகள் கடும் நெருக்கடியில் இயற்கை வழியில் உற்பத்தி செய்த பொருட்களை குறுகிய அளவு மட்டுமே இயற்கை அங்காடிகள் மூலமாக இயற்கை உணவுகளை நேசித்து உண்ண நினைப்பவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பெரும்பாலான இயற்கை வழியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வழக்கமான சந்தையிலே விற்கும் சூழல் நிலைதான் பரிதாபத்துக்குரியது. காரணம் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி போன்ற நஞ்சுகள் ஏதுமில்லாமல் பார்த்துப் பார்த்து உற்பத்தி செய்யும் உணவுகள் வழக்கமான வியாபாரிகள் கைக்கு கிடைத்தவுடன் இரசாயணங்களால் குளிப்பாட்டப் படுகிறது.
காரணம் நீண்ட நாட்கள் இருப்பு வைக்க வேண்டும். அப்போது தான் அதிக விலைக்கு விற்க முடியும்.
இந்த நிலையை மாற்ற விருதுநகர் மாவட்டத்தில் தேன்கனி இயற்கை விவசாயிகள் ஒன்றினைந்து கடந்த 5ஆண்டுகளாக இயற்கை விவசாயம், மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல், மரபு விதைகள் சேகரித்தல் & பகிர்தல், மாடித்தோட்டம் அமைத்தல், மரபு வழி மருத்துவம், குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி அளித்தல் என தங்களால் இயன்ற வேலைகளை ஒன்றிணைந்து செய்து வருகிறோம். இந்த பயணத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்களை பயிற்சிகள் மூலமாக அனைவருக்கும் பகிர்ந்து வருகிறோம்.
இதன் விளைவால் இன்று தேன்கனி உழவர் சந்தை என்கிற அமைப்பு உருவாகியுள்ளது. இதன் மூலம் 142 வார சந்தைகளின் மூலம் ஒவ்வொரு ஞாயிறும் உழவர்களே நேரடியாக சந்தைப் படுத்தி வருகிறோம்.
இதில் இயற்கை விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்யலாம். தனக்கு கட்டுப்படியான விலையை தானே நிர்ணயம் செய்து கொள்ளலாம். எந்த கமிசனும் கிடையாது. நுகர்வோருக்கும் இயற்கை விவசாயிக்கும் இடையே நேரடி தொடர்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
சத்துமிகு (சிறு)தானிய மதிப்புக்கூட்டல் தயாரிப்புகள் :
*************************************************************************
விவசாயி விவசாயியாக மட்டும் இருந்தால் போதாது. முடிந்தவரை அவருக்கான சந்தையை அவரே உருவாக்கிக் கொள்ள வேண்டும். கூடுதலாக மதிப்புக்கூட்டலும் செய்ய கத்துக்கனும் என நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார்.
அப்போது முழுப்பலனும் இடைத்தரகர், வியாபாரிகளுக்கு செல்லாமல் நேரடியாக விவசாயிக்கும், பொருளை உற்பத்தி செய்பவருக்கும், நுகர்வோருக்கும் கிடைக்கும்.
இன்று விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புக்கள் இளைஞர்களுக்கு ஏரளமாக உள்ளது.
உதாரணமாக நெல் மற்றும் சிறு தானியங்களை அரிசியாக மாற்றுதல், பயறு வகைகளை எண்ணெய்யாக மாற்றுதல், மாவு வகைகள் தயார் செய்தல், உணவுகள், மூலிகை சாறுகள், பழச்சாறுகள் , சூப்பூவகைகள் தயார் செய்தல், லட்டு, மாவு உருண்டை, பலகாரங்கள், அதிரசங்கள், முறுக்குகள் தயார் செய்தல்.
காடுகளில் கிடைக்கும் மூலிகைகளில் மூலிகை தேநீர் தயாரித்தல், குளியல் பொடி, பல்பொடி, சீக்க்காய் தயாரித்தல்,
பெண்களுக்கான நாப்கின்கள் தாயரித்தல், கதர் ஆடைகளில் குழந்தைகளுக்கு ஆடைகள் உருவாக்குதல்.
விதைகள் உற்பத்தி செய்தல், பரவலாக்குதல், தேன் பெட்டி மூலம் தேனி தயாரித்தல், திருமண மற்றும் விழாக்களில் உணவுகள் தயாரித்தல்.
மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம் அமைத்தல், குழந்தைகளுக்கு வாழ்வியல் கல்வி கற்றுக் கொடுத்தல், மரக்கன்று தயாரித்தல் என இன்னும் அடிக்கிக் கொண்டே செல்லாம்.
இவற்றில் பலவற்றை தேன்கனி மதிப்புகூட்டல் மற்றும் தேன்கனி பாரம்பரிய அறுசுவையத்தினர் செய்து வருகின்றனர். அவற்றில் கிடைத்த அனுபவங்களையும் பயிற்சி அளித்து வருகிறோம்.
பயிற்சி நாள் : 25-11-2016 முதல் 27-11-2016 வரை
பயிற்சி நன்கொடை : ரூ.2000/- ( தங்குமிடம், இயற்கை உணவு உட்பட)
பெண்களும் கலந்து கொள்ளலாம்.
தேன்கனி உழவர் சந்தை :
இதன் மூலம் இயற்கை விவசாயிகள் உற்பத்
ஆடம்பரமில்லா இயற்கை அங்காடி பயிற்சி &
& இயற்கை உணவகம் பயிற்சி ( Natural Food Restaurants ) " :
ஆடம்பரமில்லா இயற்கை அங்காடி :
******************************************************
இன்று இயற்கை விவசாயத்தில் விளைந்த விளைபொருட்களை சந்தைப் படுத்துவதில் விவசாயிகளுக்கும் இயற்கை அங்காடிகளுக்கும் ஒரு புரிதல் தேவைப்படுகிறது. நம்மாழ்வார் ஐயா போன்ற பல இயற்கை போராளிகளின் கடின உழைப்பிற்குப் பிறகு இன்றைய சமுதாயத்தில் மிகப்பெரும் கொள்கை புரட்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்ளிலும், பத்திரிக்கைளிலும் உணவுகளில் உள்ள கலப்படம்பற்றியும் , நஞ்சு கலப்படம்பற்றியும், மரபணுமாற்ற உணவுகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற நஞ்சான உணவுகள் (Packed Foods) சந்தையில் தொடர்ந்து திட்டமிட்டே பன்னாட்டு கம்பெனிகளால் மறைமுகமாகவும், நேரடியாகவும் திணிக்கப் பட்டு வருகிறது.
இது போன்ற உணவுகளை நாம் தொடர்ந்து உண்ணுவதன் விளைவு தெருவுக்குத் தெரு மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகள் அதிகரித்து புது புது நோய்கள் உருவாக்கப்படுகிறது. 3 வயதிலே சர்க்கரை நோய்கள், புற்று நோய்கள், சிறு வயதிலே பூப்பெய்தல், குறைப் பிரசவம், சத்துக்குறைபாடுகள், கண் பார்வை இழப்பு, இரத்த அழுத்தம் என நோய்களின் எண்ணிக்கை பெருக்கிக் கொண்டே செல்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில் மாற்றாக இன்று மக்களால் பெரிதும் நம்பப்படுவது இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்து வரும் இயற்கை அங்காடிகளைத் தான். ஆனால் இயற்கை அங்காடிகள் & இயற்கை உணவங்களில் இன்று அந்த நம்பகத் தன்மை என்பது கேள்விக் குறியாக உள்ளது என நுகர்வோரும் இயற்கை விவசாயிகளும் குறைகூறுவது ஒரு புறமிருக்கிறது.
முன்னொரு காலத்தில் ஒரு தொழிலை செய்வபர்கள் அந்தத் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களாக மற்றுமே இருந்து வந்தனர். ஆனால் உலகமயமாக்கல் என்பது ஏற்பட்ட உடன் ஒவ்வொன்றும் வணிகமயமாக்கப் பட்டுவிட்ட்து. அந்த வகையில் தகவல் தொழில்நுட்டபத்துறை சார்ந்த மற்றும் படித்த பலர் இயற்கை அங்காடிகள் என்கிற பெயரில் எது இயற்கை உணவுகள் என்றே தெரியாமல் தினம் தினம் அங்காடிகளைத் தொடங்கி வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க அதை விட வேகத்தில் பல இயற்கை அங்காடிகள் நஷ்ட்த்தில் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறனர்.
நீங்களும் சுய தொழில் தொடங்க வேண்டுமா? முதலாளியாக வேண்டுமா என மார்கெட்டிங் கம்பெனிகள் விடுதிகளில் ( லாட்ஜ்) Import & Export பயிற்சிகள் அளிக்கின்றன. அத்தகைய நிறுவனங்கள் பயிற்சி அளிப்பதற்கு காரணம் பெரும் கம்பெனிகளிடம் உள்ள பொருட்களை வாங்கி விற்கும் முகவர்களை உருவாக்குவது தான் என்பது அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்று இயற்கை அங்காடிகளைத் திறந்து பெரும் நஷ்டம் அடைந்த பின்னர் தான் தெரியவருகிறது.
இதற்கு காரணம் என்ன?
புரிதல் தான். பொதுவாக மூடப்படும் இயற்கை அங்காடிகள் & இயற்கை உணவகங்கள் மூடப்பட்டத்தற்கான காரணம் என்ன என்பதைப் பார்த்தால் , இவர்களுக்கு விவசாயம் என்பதே தெரியாத நபர்களாக இருக்கின்றனர். மேலும் இன்றை பேசனாக மக்களிட்த்தில் இருப்பது ஆர்கானிக் உணவுதான்.
ஆகையால் நாமும் கண்ணைக் கவரும் கண்ணாடி ஸோரும், ஏசி போன்றவை பெரும்பணம் செலவிட்டு இயற்கை அங்காடிகள் & இயற்கை உணவகங்கள் அமைத்தால் லாபம் குவிந்து கல்லாப்பெட்டியில் உட்கார்ந்து கொண்டு பணம் வாங்கிப்போடலாம் என்கிற மனநிலை பலரிடத்தில் உள்ளது.
மறுபுறம் புரிதலுடன் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அங்காடிகளும் & இயற்கை உணவகங்களும் இருக்கத்தான் செய்கிறது. இன்னும் சில சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் அங்காடிகளில் இயற்கைபற்றிய புரிதல் இல்லாமல் ” மக்காசோளம் “ உணவாக விற்கப்படுகிறது.
சீனி , அதிலும் ஆர்கானிக் சீனி , Herbo Products, Packed Cookies, முக அழகு, தலை அழகு என ஒவ்வொன்றிற்கும் ஒரு இரசாயண கலப்புள்ள பல பொருட்கள் இயற்கை என்கிற பெயரில் விற்கப்படுகிறது. நன்கு விபரம் அறிந்த நுகர்வோர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இவர்களின் பெயர் கெடுவதோடு , நுகர்வோரின் மனநிலையும் இது தான் இயற்கை உணவு போல என்கிற பிம்பம் உருவாக்கப் படுகிறது.
இதற்கு மேலும் இவர்கள் விற்கும் பொருளின் விலையோ சாதரண மக்கள் இவர்களை நெருங்கி விட முடியாது. காரணம் இவர்கள் பொருளின் மீது வைக்கும் மரியாதையை விட தன்னுடைய அங்காடிகளின் அலங்காரத்திலும் , குளிரூட்டிகளிலும் செய்யப் படும் முதலீடும் அந்த இயற்கை உணவுப் பொருளின் விலைகளில் சேர்கிறது.
ஆனால் இவர்கள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்காவது கட்டுபடியான விலை அளிப்பார்களா என்பது கேள்விக்குறிதான் ?....
மேலும் இவர்கள் விவசாயிகளிடம் வாங்குவதை விட பெரு நிறுவன்ங்களிடம் வாங்குவது தான் அதிகம்.
மேலும் தங்களுடைய அங்காடிகளில் உள்ள உணவுகளை சமைக்கும் முறை மற்றும் அதனுடைய மருத்துவத் தன்மை கூட தெரிந்திருக்க வாய்ப்பு என்பது மிகக் குறைவு தான்.
நமது உழவர்கள் கடும் சிரமத்துக்கு மத்தியிலும் அழிந்து போன பாரம்பரிய ரகங்களை மீட்டு, மறுஉற்பத்தி செய்யும் சிகப்பரிசியை எத்தனை அங்காடிகள் மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. அதை விவசாயிகளிடமே நேரடியாக மாப்பிள்ளை சம்பா தவிர்த்து குறைந்த்து 25கிலோ வாங்க தயாரக உள்ளது ?
அரிசிகளில் மாப்பிள்ளை சம்பா தவிர்த்து வேறு ஏதாவது பெயர் தொரியுமா... புழுகல் பச்சை அரிசி வேறுபாடு தெரியுமா ?
இயற்கை அங்காடிகளில் விற்கும் பலகாரங்களில் எந்த எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது? பெரும்பாலும் ரீபைண்ட் ஆயில், ரைஸ் பிரான் ஆயில் தான். இனிப்பிற்கு சீனி, சுக்ரோஸ் தான். மைதா சிறிது ? இது சரியா?
மேலும் பாரம்பரிய காய்கறி ரகங்களை தேடிபிடித்து பயிரிடும் விவசாயிகளின் நிலையோ இன்னும் மோசம்....
தன்னுடைய அங்காடிகளில் விற்கும் பொருட்களை தன்னுடைய வீட்டில் சமைக்க பயன்படுத்தாமல் வெளிகடைகளில் வாங்கி உட்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தீர்வு தான் என்ன?.....
****************************
இயற்கை அங்காடிகள் நடத்தி வருபவர்களும், புதிதாக அமைக்கவிருப்பம் உள்ளவர்களும் முதலில் இயற்கைப் பற்றிய ஆழமான புரிதல் கொண்டிருக்க வேண்டும். பின்னர் நம்மாழ்வார் ஐயாவின் வானகம் அல்லது முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை வழி விவசாயம்பற்றிய பயிற்சியும் பெற்றிருக்க வேண்டும். முடிந்தவரை இயற்கை விவசாயம் செய்யக் கூடிய நபர்களாகவும் இருக்க வேண்டும்.
குறைந்தது தன்னுடைய வீட்டிலே வீட்டுத் தோட்ட செய்த அனுபவமாவது இருக்க வேண்டும். ஆங்கில மருத்துவம் தவிர்த்து மரபு வழி மருத்துவத்தை நடைமுறையில் கடைபிடிப்பவராகவும் இருக்க வேண்டும். பின்னர் சமூக பார்வையும் கொண்டிருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட நபர்களை சமூகத்தில் உருவாகும் போது நம்மாழ்வார் ஐயாவின் கனவு மெய்ப்படும்.விவசாயிகளின் வாழ்வும், நுகர்வோருக்கு நல்ல உணவும் அங்காடி நடத்துபவர்களுக்கு நல்வாழ்வும் கிடைக்கும்.
இது போன்ற மாற்றத்தை ஏற்படுத்தும் பணியில் எங்களுடைய ” தேன்கனி வாழ்வியல் மையம் “ தொடர்ந்து இயங்கி வருகிறது. ”
“ எந்த மாற்றத்தை சமூகத்தில் எதிர்பார்க்கிறோமோ... அந்த மாற்றத்தை உன்னிடமிருந்தே துவங்கு “ என்கிற காந்தி அடிகளின் கருத்தை நம்மாழ்வார் ஐயா அவர்கள் எங்களுக்குள் விளைத்தன் விளைவாக , எங்களுடைய சொந்த ஊரான சிவகாசியில் அதன் வளர்ச்சி அசுர வேகம் கொண்டுள்ளது.
அதன் விளைவாக
1. காலையில் வீதியெங்கிலும் சமைக்காத முளைகட்டிய உணவுகள் & மூலிகை சாறுகள்
2. திரும்பும் பக்கங்மெல்லாம் பழ வண்டிகள் , கம்பங்கூழ் வண்டிகள்
3. ஞாயிறு தோறும் உழவர்களின் தேன்கனி நேரடி இயற்கை விளைபொருள் சந்தை
4. சிறுதானிய சிற்றூண்டிகள் & வழக்கமான உணவுகடைகளில் கூட பாரம்பரிய உணவுகள்
5. இயற்கை விவசாயப் பயிற்சிகள் & மாடித் தோட்ட அமைக்க பயிற்சிகள்
6. மகளிர் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய மரபுவழி மதிப்புக்கூட்டல் உணவுகள் என எங்களுடைய செயல்பாடுகளில் சில....
7. இளைஞர்களுக்கு சுய தொழில்கள்
இவை எங்களை விளம்பரப்படுத்துவதற்காக சொல்லப்படுபவை அல்ல....
இது போன்ற ” சின்ன மாற்றங்கள் தான் மிகப் பெரிய சமூக கட்டமைப்பை உருவாக்கும் ”என்கிற நம்மாழ்வார் ஐயாவின் கூற்றை மெய்பிக்க எங்களின் சிறு உழைப்பில் விளைந்தவை இவை. அதிகாராமும் அறிவும் ஓரிட்த்தில் இருக்காமல் அது பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற நம்மாழ்வார் ஐயாவின் சொல்லை நாங்களும் ஏற்று நடக்கிறோம்.
ஆகவே எங்களுக்கு கிடைத்த அனுபவங்களையும் , தகவலையும் , நல்மனிதர்களையும், சாறுக்கல்களையும், போராட்டங்களையும் அறிவையும் பகிர நாங்கள் தயாராக இருக்கிறோம். இது ஒரு நாளில் எங்களுக்கு கிடைக்கப் பெற்றவை அல்ல. எனவே நண்பர்களே இவையெல்லாம் தொலைபேசி வாயிலாக ஒவ்வொரு நபருக்கும் பகிர்வதென்பது எஙகளுடைய வேலைப்பளுவுக்கு நடுவே மிகக் கடினம் . ஆகவே ஒரே சிந்தனையுள்ள, ஒத்த கருத்துள்ள , இதை விட மாற்றுவழிகளுடைய நபர்களே ஒன்று கூடுவோம் ஒரு அனுபவ பயிற்சியில்......
ஆடம்பரமில்லா இயற்கை அங்கடி பயிற்சி &
சத்துமிகு (சிறு)தானிய மதிப்புக்கூட்டப்பட்ட உணவு தயாரிப்பு பயிற்சி ( பகிர்வு) நாள் :
*********************************************************************
நாள்: நவம்பர் 25, 2016 வெள்ளி காலை 10மணி முதல்
நவம்பர் 27 ஞாயிறு மாலை 3 மணி வரை
இடம் : தேன்கனி வாழ்வியல் மையம்
சாமிபுரம் காலணி, மகேஷ் மாவுமில், சிவகாசி. விருதுநகர் மாவட்டம்.
எளிய தங்குமிடம் & இயற்கை உணவுகள் வழங்கப்படும்.
பயிற்சியில் :
*****************
1. ஆடம்பரமில்லா இயற்கை அங்காடி நட்த்த தேவையான அடிப்படை புரிதல்கள்
2. இயற்கை வழி விவசாயம்பற்றியும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பாரம்பரிய உணவுகள்
3. சிறு தானியங்களில் செலவில்லாமல் மதிப்புக்கூட்டும் உணவுகளான லட்டு வகைகள், கார வகைகள், கருப்பட்டியில் செய்யப் படும் கருப்பட்டி தேன்கூழல் மிட்டாய், ஜீலேபி, சேவு வகைகள், அதிரசம், ரெடி தோசை மிக்ஸ், முளைகட்டிய நவதானிய சத்துமாவுகள் தயாரித்தல் போன்றவை
4. குளியல் பொடி, சீக்க்காய் பொடி, மசாலாப் பொடி, இட்லி பொடி, எள்ளு இட்லிப்பொடி, ஆவாரம்பூ தேநீர் பொடி, பல்பொடி போன்ற பல மதிப்புக்கூட்டல்கள்
5. மரபணுமாற்ற உணவுகளின் தீமைகள், எந்தெந்த உணவுகளை அங்காடிகளில் விற்பனை செய்யலாம், செய்யக் கூடாது.
6. அடிப்படை இயற்கை மருத்துவம் , உணவு மருத்துவம் & தொடு சிகிச்சை, யோகா சிகிச்சை
7. மாடி வீட்டுத்தோட்டம்
8. உணவுகள் தயாரித்து 142 வது தேன்கனி உழவர் வாரசந்தையில் சந்தைப்படுத்துதல் களப்பயிற்சி
9. சுவரில்லா கல்விமுறை அடிப்படையும் & அதன் தேவையும்…
10. சில இயற்கை வாழ்வியல் விவாதங்கள்.. இன்னும் பல…
மேலும் தேன்கனி உழவர் சந்தையில் நேரடி களப்பயிற்சியும், இயற்கை அங்காடி அமைத்திட தேன்கனி உழவர் நேரடி விற்பனை சந்தையின் வழிகாட்டுதலுடன் கூடிய ஆலோசனைகளும் அளிக்கப்படும்.
பயிற்று நர்கள் :
*********************
1.வானகம் நிர்வாக அறங்காவலர் “ திரு. குமார் “
2. மாற்றுக் கல்வியாளர் “ பாஸ்கர் ஆறுமுகம் “
3. திரு. ஞானசேகரன் தேன்கனி உழவர் சந்தை
4. திரு. முத்துக்குமார் தேன்கனி அறுசுவையகம்
5. மல்லிகா, வைத்தியர் கருப்பசாமி மற்றும் பலர்
6. ஜெகத் ராமன் தொடுசிக்கை அடிப்படை
7. மாடித் தோட்டம் முனியசாமி
8. இயற்கை விவசாயிகள் நாராயணன், சபாபதி, ஜெ.கருப்பசாமி
மற்றும் தேன்கனி வாழ்வியல் மையத்தின் செயற்குழு உறுப்பினர்கள்
பயிற்சியை சிவகாசி தேன்கனி உழவர் சந்தையின் உறுப்பினர்களும், வானகம் கல்விக்குழுவும் ( நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம்) அளிக்கிறார்கள்.
பயிற்சிக்கான ( பகிர்வுக்கான)
நன்கொடை : ரூ. 2000/-
( இந்தக் கட்டணம் என்பது இலாபம் சம்பதிக்க வேண்டும் என்கிற எண்ணத்திற்கானது அல்ல. எங்களுடைய அமைப்பின் அடிப்படை நிர்வாக செலவுக்கும், பயிற்றுநர்களுக்கான போக்குவரத்து செலவுகள் மற்றும் பயிற்சி பெறுவோரின் இயற்கை உணவுகள் மற்றும் பழச்சாறுகள், மூலிகைகளுக்கான செலவுகள்..... )
கட்டணத்தை பயிற்சி வருமுன்னரே செலுத்துவது
எங்களுடைய கரங்களை வலுசேர்க்க உதவியாக இருக்கும்.
20 நபர்களைக் கொண்டு மட்டுமே
பயிற்சி நடத்தப் படும்.
முன்பதிவு அவசியம்.
முன்பதிவு கடைசி நாள் நவம்பர் 23 புதன்கிழமை
முன்பதிவு செய்ய & ஆலோசனை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :
ஜெ.கருப்பசாமி 94435 75431 , ஞானசேகர் : 98431 27804 கார்த்திக் 99442 07220,
நல்லதொரு வாழ்வியல் கட்டமைப்பை உருவாக்க.வோம்.....
புகைப்படங்கள் : கடந்த காலங்களில் நடைபெற்ற பயிற்சிகளில் எடுக்கப் பட்டது.
நன்றி

Monday, November 7, 2016

இனி வார வாரம் பலகாரங்கள் 



தேன்கனி மதிப்புக்கூட்டல் தீபாவளிப் பலகாரங்கள் :
*********************************************************************
நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார்.
பொருளை மதிப்புகூட்டல் என்பது மிக முக்கியமானது. அந்த துறையில் நாம் எப்போது பலம் வாந்தவர்களாக மாறுகிறோமோ அப்போது தான் இயற்கை வழி விவசாயம் ( வாழ்வியல்) என்பது முழுமையடையும்.
ஒரு விவசாயி என்பவர் முதலில் தானியத்தை தானியமாக விற்காமல் அரிசியாக விற்க முயலவேண்டும். பின்னர் அதை மாவாக மாற்றி விற்க வேண்டும்.
அது போல நிலக்கடலையை உடைத்து பருப்பாக விற்க வேண்டும். பின்னர் அதை எண்ணெய்யாக மாற்ற வேண்டும். அதன் பின் பருப்பை செக்கில் கொடுத்து எண்ணெய்யாக மாற்ற வேண்டும்.
பின் ஏற்கனவே உள்ள அரிசி மாவையும், தற்போது செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்யையும் சேர்த்து அதிரசமாகவும், முறுக்காவும், லட்டாகவும், மாவு உருண்டையாகவும் மாற்றி மதிப்புக் கூட்ட வேண்டும்.
அப்போது சமூகத்தில் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகள் பெருகும். மக்களுக்கு கலப்படமில்லா ஆரோக்கிய உணவுகள் அருகிலே கிடைக்கும். அமெரிக்காவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் மற்றும் பல உலக நாடு களிலிருந்தும் நமக்கு முற்றிலும் பழக்கமில்லாத Fast food என்கிற slow Poison food .
slow Poission food என்பது உற்பத்தி செய்ததிலிருந்து குறைந்தது ஒரு மாதம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வந்து, அந்த நாட்டின் தலை நகரத்தில் குறைந்தது 1மாதம் பின் மாநிலத்தின் தலை நகரத்தில் குறைந்தது 1மாதம் , பின் மாவட்த்தின் தலை நகரத்தில் குறைந்தது 1மாதம், பின் ஊரின் மொத்த வியாபாரியிடத்தில் குறைந்தது 1மாதம் பின் சில்லறைக் கடைக்காரரின் கடையில் குறைந்தது 1மாதம் , இறுதியாக நுகர்வோரின் வீட்டில் ஃப்ரிட்ஜில் குறைந்தது 1மாதம் என குறைந்தபட்சம் 8 மாதமாவது உணவை உண்ண கால தாமதமாகும்.
அந்த இடைப்பட்டக் காலம் வரை உணவு எங்கும் கெட்டுப் போகாமலிருக்க எண்ணிக்கையிடங்காத அளவு இராசாயணங்களால் ( Preservatives ) குளிப்பாட்டப் படுகிறது. இதை உண்ணும் போது உணவுப் பாதைக்கு சென்று செரிமானமாகமல் கொழுப்பாக, கழிவாக உடலில் தேங்கி புற்றுநோயை உண்டாக்குகிறது.
மேலும் இது போன்ற உணவுகளை நாம் ஊக்குவிப்பதால் தான் இன்று உணவு தானியங்களின் பதுக்கல் அதிகரித்து விலைவாசி ஏற்றம் கட்டுப் படுத்த முடியால், தெருவுக்கு தெரு பலவித மருத்துவமனைகள் உருவெடுத்துள்ளது.
இந்த நிலை மாற வேண்டுமானால் நம்மாழ்வார் ஐயா கூறியது போல்
Food should be locally produced
உள்ளூரிலே உற்பத்தி செய்ய வேண்டும்
Food Should be locally Consumed
உள்ளூரிலே நுகரப்பட வேண்டும்
It Should be Fresh & Taste நமக்குப் பழக்கப் பட்ட உணவாகவும் சுவையானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் ஒருவர் உண்ணும் உணவு உலகில் ஏதோ ஒரு பகுதியில் விளைந்து உலகம் முழுவதும் பயணம் செய்து குறைதது 2500 கிலோ மீட்டர் பயணம் செய்து பின் தட்டில் உண்ண கொடுக்கப் படுகிறது.
தேன்கனி பாரம்பரிய அறுசுவைகயகம் :
********************************************************
இது போல் நம்மாழ்வார் ஐயாவின் பல்வேறு கருத்துக்களால் பெரிதும் தூக்கமிழந்து தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிய நபர்களில் ஒருவர் ” தேன்கனி க.முத்துக்குமார் ” . கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னால் இயன்றவரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தான் மட்டும் நகரவில்லை. தன்னோடு சேர்ந்து ஒரு சமூகத்தையும் மாற்றம் அடைய செய்துள்ளார்.
தேன்கனி அமைப்பின் ஒரு பகுதியான தேன்கனி பாரம்பரிய அறுசுவைகயகம் என்று பலரை இணைத்து குழுவாக உருவாக்கி செயல்பட்டுவருகிறார்.
நம்மாழ்வார் ஐயாவின் கருத்துக்கள் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டுமே மாற்றக் கூடியது என்று பலர் நம்புவதுண்டு. ஐயாவிடம் நன்கு பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும் நம்மாழ்வார் என்பவர் இயற்கையை நேசித்து வாழத்துடிக்கும் எல்லா துறைகளிலும் வாழ்பவர்கள் மனதிலும் கருத்துக்களை விதைத்தவர்.
அத்தகைய ஐயாவின் கருத்துக்களால் , இளைஞர் முத்துக்குமார் ஐயாவிடம் பெற்ற பயிற்சியுடன் தன்னுடைய தந்தையார் நடத்தி வந்த வழக்கமான பலகாரக்கடையை இன்று பாரம்பரிய பலகாரக் கடையாக மாற்றி வருகிறார்.
மேலும் தேன்கனி வாழ்வியல் பண்ணையில் 1ஏக்கர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் குறுகிய நேரத்தில் குதிரைவாலி, சோளம் பயிரிடுகிறார். அதில் கிடைக்கும் பொருட்களுடன், தனக்குத் தேவைப்படும் மற்ற இயற்கை சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகள், செக்கு எண்ணெய்களை தேன்கனி உழவர்களிடம் நேரடியாகப் பெற்று அதை பலகாரகமாக மாற்றுகிறார்.
கடந்த 3ஆண்டுகளாக தேன்கனி உழவர் ஞாயிறு சந்தை, தெரிந்த இயற்கை அங்காடிகள், வெளியூர் நண்பர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக பண்டிகைகால ஆர்டரையும் செய்ய வேண்டும் என முயற்சி செய்தார். அதன் பலனாக ஏற்கனவே இவருடைய பலகாரங்களை உண்டு சுவை பார்த்த மக்கள் கொடுத்த ஊக்கத்தினால் இந்த தீபாவளிக்கான முன்பதிவைத் தொடங்கினார்.
அவர் எதிர் கொள்ளும் சவால்கள் :
*********************************************
இன்று இரசாயன கலப்புள்ள பேக்கிரி உணவுகள் சந்தையை ஆக்கிரமித்து உள்ளது. அதற்கான விளம்பரங்கள், ஆடம்பரங்கள், வண்ணங்கள், சுவைகள், உணவு கெட்டுப் போகாமல் அதிக நாள் நிலைத்திருக்கும் தன்மை போன்றவைகள் மக்கள் மத்தியில் இதுதான் சரியான உணவு, ஆனால் உடலுக்கு ஏதோ கேடு செய்யத்தான் செய்கிறது என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ளக் கூடியது.
இதற்கு அடுத்தபடியாக சரியான மாற்று என்று மக்கள் மட்டுமல்ல இயற்கை அங்காடிகள் கூட நம்புவது சிறுதானிய ரொட்டி ( cookies ) என்பதும், பாமாயில் அல்லது ரைஸ் பிரான் ஆயிலில் செய்த பலகாரங்கள், சிறுதானியங்கள் பயன்படுத்தி வெள்ளை சர்க்கரை மற்றும் பல இரசாயன்ங்கள் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள் தான் இவைகளும்.
இது சரியா ? அல்லது பராவாயில்லையா ? என்பது சிந்திக்க வேண்டிய பகுதி….
நம்முடைய நலனுக்கு என்றைக்கு சமரசம்
ஆகிறோமோ அன்று தான் தீமையின் திசைகளில்
கால் வைக்கத் துவங்குகிறோம்...
இயற்கை வாழ்வியல் வழிகாட்டி “ கோ. நம்மாழ்வார்
ஐயா கூறிய இந்த வார்த்தையை ஆழமாக நாம் புரிந்து கொண்டோமேயானால் நாம் மாற்று என்கிற பெயரில் சமரம் அடைய மாட்டோம்.
இது போல் சமரம் என்பது சிறு அளவுகூட இருக்கக் கூடாது என்பது இளைஞர் முத்துக்குமாரின் கொள்கை.
அதன் படி பலகாரங்களுக்கான மூலப் பொருட்கள், சுவை, நிறம், கெட்டுப் போகாமல் பொருட்களின் தாங்கும் நாள் (Expiry date), உழைப்பு என்பது முழுவதுமே சவால் நிறைந்தது. அதற்கு அவர் கையாளும் முறையே மிக எளிமை.
இயற்கை இயல்பானது, அதற்கு ஆடம்பரம் கிடையாது. செயற்கைப் பூச்சுத் தேவையில்லை. செயற்கை மணம் தேவையில்லை என்கிற கருத்தை ஏற்பவருக்கு மட்டுமே விற்பனை செய்கிறார். வழக்கமான(பேக்கரி) உணவுகளை போல் இவரின் பலகாரங்களை எதிர் பார்ப்பவர்களுக்கு “ அவர் அளிக்கும் பதில் இது உங்களுக்கான உணவு அல்ல “
இத்தகைய சாவால்களைத் தாண்டி 3ஆண்டுகளாக பல்வேறு வகையான பலகாரங்களை உருவாக்கி வருகிறார். அத்தகைய அனுபவத்தோடு தேன்கனி குழுவில் இருக்கும் நண்பர்களின் பலகாரங்களையும் ஒருங்கிணைத்து மொத்தமாக நம்முடைய பாட்டி முற்காலத்தில் செய்து கொடுத்த கைப்பக்குவத்தில் இந்த தீபாவளிக்கு தேன்கனி சிறப்பு பலகாரங்களை உருவாக்கி அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.



அவைகளின் பட்டியல் :
இனிப்புக்கள் :
******************
கருப்பட்டி நவதானிய திரிகடுகம் அல்வா
சீரக சம்பா அதிரசம்
பூந்தி லட்டு
வரகு கருப்பட்டி ஜிலேபி
வரகு கரும்பு சர்க்கரை ஜிலேபி
எள்ளு உருண்டை
கடலை உருண்டை
பேரீட்சை லட்டு
திரிகடுகம் கடலை மிட்டாய்
மாப்பிள்ளை சம்பா அவல் இனிப்பு மிட்டாய் பொரி
கார வகைகள் :
*******************
சாமை மிக்சர்
கேழ்வரகு மிகசர்
சாமை முறுக்கு சேவு
வரகு காரச் சேவு
குதிரைவாலி ரிப்பன் சீவல்
குதிரைவாலி ஓமப் பொரி
நவதானிய கருப்பட்டி சாக்குலேட்
மாப்பிள்ளை சம்பா அவல் காரப் பொரி
கேழ்வரகு முடக்கற்றான் கீரைப் பக்கோடா
இவையனைத்தும் சுத்தமான செக்கு கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்கள் மட்டுமே பயன்படுத்தி சீனி, மைதா, கோதுமை துளிஅளவும் பயன்படுத்தாமல் செய்தார். மேலும் இரசாயணங்களும் பயன்படுத்தாமல் இயற்கை வழியில் விளைந்த நமது மண்ணின் பாரம்பரிய சத்துமிகு சிறு தனியாங்களான வரகு, சாமை, திணை, குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா அரிசி, எள்ளு, பாசிப்பயறு, நிலக்கடலை, கரும்பு சர்க்கரை, கருப்பட்டி, மண்ணை வெல்லை மற்றும் பயறு வகைகளால் பலகாரங்களைத் தயாரித்தார்.
இந்த உணவுகளை தயாரிக்க அவருக்குத் துணையாக தந்தை திரு. கணேசன் ஐயா, தாய் மாரித்தங்கம், தங்கை முனீஸ்வரி மற்றும் வைத்தியர் கருப்பசாமி, வனிதா, பாஸ்கர் குடும்பத்தினர் & பல வயதான பெண்களின் துணையுடன் குழுவாக தயாரித்தார்.
அந்தப் பலகாரங்களை கடந்த 10 நாட்களாக தேர்வு செய்யப்பட்ட சிவகாசி , விருதுநகர், இராஜபாளையம் , அருப்புக் கோட்டை, மதுரை, சென்னை, நெய்வேலி, கரூர், அரியலூர், கோவை போன்ற தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு நேரடியாகவும், இயற்கை அங்காடிகளுக்கும் லாரி சர்வீஸைப் பயன்படுத்தி அனுப்பியுள்ளார்.
வாழ்க்கையை உயர்த்திய தருணம் :
************************************************
இந்தப் பலகாரங்களை உண்ட சிவகாசியைச் சேர்ந்த நண்பரின் குடும்பத்தினர் தன்னுடைய மகளுடைய திருமணத்திற்கு சீதனமாக அளிக்கும் பலகாரங்களில் இது தான் இடம் பெற வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம், செய்து கொடுக்க முடியுமா ?
இன்னொருவர் தன்னுடைய குழந்தையின் பிறந்த நாளுக்கு சாக்லோட் கொடுக்காமல் இனி இந்தப் பலகாரங்கள் தான் என்றார்.
இந்த நம்பிக்கை அவருடைய வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கி நகர்த்தியுள்ளது.
இனி வார வாரம் பலகாரங்கள் :
******************************************
இனி ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளுக்குள் பலகாரங்களை ஆர்டர் செய்தால் வெள்ளிக் கிழமைகளில் அளிக்க உள்ளார்.
இயற்கை அங்காடி மற்றும் வெளியூர் நண்பர்களுக்கு கொரியர் அல்லது பார்சல் சர்வீஸில் அனுப்பத் தயாராகி உள்ளார்.
இயற்கையில் பணி செய்வோருக்கு
இயற்கை கூலி கொடுக்கிறது. அது தான் மனநிறைவு.
என்கிற நம்மாழ்வார் ஐயாவின் வரிகளை நினைவு படுத்துகிறார்.
இது மட்டுமல்ல நண்பர்களே உங்களாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்..
நன்றி..
தொடர்புக்கு :
தேன்கனி க.முத்துக்குமார் 97876 48002
https://www.facebook.com/profile.php?id=100013428186669
சிவகாசி.