Friday, April 27, 2018

நேற்று விவசாயி இன்று பயிற்சியாளர் :
இயற்கை விவசாயி திரு. நாராயணன் அவர்கள் பற்றிய சிறு அனுபவப் பகிர்வு
ஜெ.கருப்பசாமி
Image may contain: Narayanan, smiling, beardImage may contain: tree, plant, outdoor and nature
நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார்
இன்று பசுமைப் புரட்சியின் கொடூர விளைவால் பெரும்பாலான விவசாயிகள் செக்கு மாடுகள் போல் பழக்கப்படுத்தப் பட்டுள்ளனர்.
Mono crop எனப்படும் ஓரின பயிர் சாகுபடி உற்பத்தியாளர்களாக மாற்றப் பட்டுள்ளனர். இதன் விளைவால் அவர்கள் ஒரே மாதிரியான வேலையை மட்டுமே செய்து பிழைப்பு நடத்தும் அவல நிலைக்கு மாற்றப் பட்டுள்ளனர்.
இந்த நிலையை மாற்ற நம்மாழ்வார் ஐயா அவர்கள் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்காக கடுமையாக வேலை செய்தார்.
அதற்காக தானே, நேரடி களப் பயிற்சிகள் பலவும் தந்தார். இதன் விளைவால் இன்று இயற்கை வழி விவசாயம் செய்யத் துவங்கும் பெரும்பலான விவசாயிகள் செக்கு மாடுகள் போல் ஒரே வேலையில் மாட்டிக் கொண்டு காலத்தை கழிக்காமல், தன்னுடைய சுய ஆற்றலால் பல பரிமாணங்களில் காட்சியளிக்கின்றனர்.
பண்முகத் தன்மையுடைவர் :
அந்த வகையில் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கும் நபர் சிவகாசி அருகில் காரிச்சேரி கிராமத்தில் தன்னுடைய மூன்று அரை ஏக்கர் பண்ணையில் இயற்கை விவசாயம் செய்து வரும் திரு. நாராயணன் அவர்கள்.
நம்மாழ்வார் ஐயாவின் லட்சிய பூமியான வானகத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டு தேன்கனி இயற்கை விவசாயக் கூட்டமைப்பில் தன்னை முழுமையாக அர்பணிப்போடு ஈடுபடுத்திக் கொண்டவர்.
நம்மாழ்வார் ஐயா உருவாக்க நினைத்த பன்முகத் தன்மை கொண்ட நபர். அடிப்படையில் இவர் விவசாயக் குடும்பம் தான். அடிப்படைக் கல்வி மட்டுமே பயின்ற இவர் குடும்ப நெருக்கடி காரணமாக சென்னை சென்று வண்டி இழுத்தல் தொடங்கி, சமையல், கடை வியாபாரம் வரை பல தளங்களில் பணியாற்றினார்.
ஒரு தருணத்தில் நம்மாழ்வார் ஐயா பிராச்சாரம் செய்து வரும் முக்கிய கருத்தான, நம்முடைய சொந்த நிலத்திலே இயற்கை விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழலாமே, என விருப்பப் பட்டவர். தன் தந்தையை சரிகட்டி களத்தில் இறங்கினர்.
சந்தைப்படுத்துபவர் :
முதலில் இயற்கை விவசாயத்தில் ஜெயித்துக் காட்டினர். பின் தான் விளைவித்த பொருளை தானே நேரடியாக தேன்கனி சந்தையில் சந்தைப் படுத்தி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
மதிப்புக்கூட்டுநர் :
பின் கிடைக்கும் நேரங்களில் குடும்பத்தினரோடு இணைந்து தன்னுடைய நிலைத்தை சுற்றி விளைந்த மூலிகைகள் கொண்டு வானகத்தில் நாம் அனைவரும் குடிக்கும் மூலிகை சுக்கு மல்லி தேநீரை தயாரிக்கக் கற்றுக் கொண்டு தமிழக முழுவதும் உள்ள இயற்கை ஆர்வலர்களுக்கும், அங்காடிகளுக்கும் அனுப்பி வைக்கிறார்.
பின் பாரம்பரிய நாட்டு விதைகள் உற்பத்தி தொடங்கி, தன் வயலின் வரப்பில் விளையும் ஆமணக்கு முத்திலிருந்து பாரம்பரிய விளக்கு எண்ணெய்யும் தயாரித்து நேரடி விற்பனை செய்கிறார்.
Image may contain: Narayanan, smiling, standing, grass, outdoor and nature
கருவி உற்பத்தியாளர் :
பின் கிடைக்கும் நேரங்களில் சைக்கிள் ஊடு உழவுக் கருவிகள் மற்றும் பவர் டில்லருக்குத் தேவையான உதிரி பாகங்கள் செய்து கொடுக்கிறார்.
பயிற்சியாளர் :
இவற்றையெல்லாம் தாண்டி நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார் “ ஒவ்வொரு அனுபவ விவசாயியும் ஒரு விஞ்ஞானி தான் “ என்பார். அவரே ஒரு அறிவுக் களஞ்சியம். அவரின் அனுபவ அறிவுக் களஞ்சியம் அனைவருக்கும் பயன்படுமாறு கைமாற்றிக் கொடுக்கப் பட வேண்டும்.
அந்த வகையில் தேன்கனி அமைப்பானது நாராயணன் அவர்களை பயிற்சியாளராகவும் பயிற்சியளித்துள்ளது. இதன் காரணமாக இன்று அவர் தேன்கனி நடத்தும் பயிற்சிகளில் முதன்மையானவராகத் திகழ்கிறார். அதுபோக ஆங்காங்கு நடைபெறும் விவசாயக் களப் பயிற்சிகளிலும் கலந்து கொண்டு தன் அனுபவத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

பண்ணை வடிவமைப்பாளர் :

Image may contain: sky, outdoor and natureImage may contain: tree, sky, plant, outdoor and natureImage may contain: tree, plant, outdoor and nature
கடந்த ஒரு வருடமாக பண்ணையில் அகழி எடுத்தல் தொடங்கி மழை நீர் சேகரிப்பு, பண்ணைக் குட்டை, உயிர்வேலி அமைத்தல், பல்வகை மரக்கன்றுகள் தேர்வு செய்தல், பல வகைப் பயிர்கள் சாகுபடி செய்தல், மானாவாரிப் பயிர்கள் சாகுபடி, நெல், காய்கறி சாகுபடி, மதிப்புக்கூட்டுதல், ஒட்டு மொத்த பண்ணை வடிவமைப்பாளர் என தமிழகத்தில் ஆங்காங்கு நண்பர்கள் அழைக்கும் பண்ணைகளுக்கு நேரடியாக சென்று அந்த சூழலை ஆய்வு செய்து
அந்த சூழலுக்கு தகுந்த ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகிறார். இதன் மூலம் நிலத்தில் வேலையில்லாத நாட்களில் மேற்கூறிய பண்முகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இயற்கைக் கெடுக்காத, ஆரோக்கிய சமூகம் உருவாக சூறாவளியாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
இது போன்ற பயணங்களில் நண்பர்கள் கொடுக்கும் பணத்தைக் கொண்டு தன் வாழ்வியலை மேம்படுத்தி தற்போது பண்ணையிலே சூழலைக் கெடுக்காத எளிமையான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார்.
மேலும் இன்று நம்மாழ்வார் ஐயாவின் இயற்கை வாழ்வியல் குறித்தான தத்துவங்களை நன்கு கற்றுணர்ந்த படித்த இளைஞர்கள் நிறைய பேர் உருவாகி உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலனோர் தான் கற்றுணர்ந்த அனுபவங்களை யாருக்கும் பயன்படாமல் தன்னுளே தேக்கி வைக்கின்றனர்.
மற்றவர்களுக்கும் கைமாற்றிக் கொடுக்காமல், பலபேர் பயனடைய நம்மாழ்வார் ஐயாவிடமிருந்து கைமாற்றிக் கொடுக்கப் பட்ட அறிவை வீணாக்கி காலத்தை கழித்து வருகின்றனர்.
இவர்களைப் போன்றோர் மத்தியில் இளைஞர் நாராயணன் அவர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார். இவரைப் போன்ற நம்மாழ்வார் ஐயாவின் வித்துக்கள் எல்லா இடங்களிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
எந்த பந்தாவும், கர்வமும் இல்லாமல் இயங்கி வரும் வாழும் நம்மாழ்வார்களான இவர்களிடமிருந்து அனைவரும் கற்றுக் கொள்ளாலம். அனுபவங்களை கைமாற்றிக் கொள்ளலாம்.
இயற்கை விவசாயம் செய்து வாழ்க்கையை மகிழ்வாக வாழ முடியுமா ? எனக் கேள்வி கேட்டுத் தயங்குபவர்களுக்கு, இளைஞர் நாராயணன் பதிலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இது போன்று பண்முகத் தன்மையோடு ஒவ்வொரு இளைஞரும் மாறுவோமேயானால் நம்மாழ்வார் ஐயா தேடிய ஆயிரம் இளைஞர்களில் ஒருவராக நாமும் மாறலாம். ஒவ்வொரு கிராமங்களையும் “ வாழும் கிராமங்களாக ” உருவாக்கலாம்.
Image may contain: tree, outdoor, nature and waterImage may contain: plant, tree, outdoor and nature
அகழி புகைப்படங்கள் :
இந்த பதிவில் உள்ள புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன் வடிவமைக்கப்பட்ட அகழிமுறை மழைநீர் தடுப்பு. பருவத்தில் செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்ததால் தற்போது பெய்து வரும் கோடை மழையால் நிரம்பிய அகழிகள்.
வழக்கமாக இது போன்ற உயரமான மழை நீர் தடுப்புகள் அமைக்காத பண்ணைகள் பெய்யும் மழை நீரை ஒட விட்டுப், பின் நிலத்தடி நீர் குறைந்து விட்டது எனவும், மண் அரிப்பு ஏற்பட்டு மரங்கள், மண் பாதிக்கப் பட்டுள்ளது எனவும் வருந்துவார்கள்.
ஆனால் திரு. நாராயணன் அவர்களின் வழிகாட்டுதலில் உருவான இப்பண்ணை தற்போது மழைநீர் சேகரிக்கப்பட்டு நிலத்தடி நீரின் சுவையும் மாறியுள்ளது.
நண்பர்களே இது சரியான பருவம். பண்ணைகளை திட்டமிட்டு செலவு குறைந்த முறையில் சரியான பருவத்தில் வடிவமையுங்கள்.
இது என் அனுபவம்..
நன்றி.
ஜெ.கருப்பசாமி
தேன்கனி நாராயணன்
அவர்களைத் தொடர்பு கொள்ள : 96554 37242
இவர் விவசாயி என்பதால் நண்பர்களே அவரின் வேலைப் பளுவை மனதில் கொண்டு அவருக்கு சிரமம்யேதுமில்லாமல், தேவையான தகவலை சுருக்கமாகவும், அவருடைய ஓய்வு நேரம் என்ன என்று கேட்டும் பேசி பயனடைய வேண்டுகிறேன்.