பருவநிலை மாற்றமும், விதையும்
வாருங்கள் உரையாடுவோம்.
விதைகளோடும், விதைகளாய் வாழ்வபரோடும்…
பகுதி – 2
அனுபவப் பகிர்வு :
ஜெ.கருப்பசாமி (5-10-25)
#நம்மாழ்வார் ஐயா நாளும் கூறுவது இனியாரும் கணிக்க முடியாத நிலைக்கு #பருவநிலை மாற்றம் சென்றுவிட்டது.
#விதைக்கும் நேரத்தில் பெய்வதில்லை. அறுக்கும் நேரத்தில் பெய்யும். பகுதி பகுதியாக பெய்த #மழை ஒரேநாளில் பெய்து பின்னர் காய வைத்து சோதித்துவிடும் என்பார்.
#பருவநிலை மாற்றம் பற்றி இங்கு கவலைப்படுவோரோ அல்லது மாற்றுபற்றி யோசித்து தீர்வைப் பற்றி விவாதிப்போரோ இல்லை.
விளைவு கடந்த சில வருடங்களாகவே சீரான பருவநிலை, மழையில்லை என்பதை அனுபவப்பூர்வமாக பார்த்து வருகிறேன். இதன் விளைவால் சில சில பருவகால ஊட்டச்சத்துமிக்க தனித்துவமான உணவுகளை இனி நாம் நினைத்து கூட பார்க்க இயலாது.
6வருடங்களுக்கு முன்னர் எங்களுடைய #தேன்கனி குழுவின் 60 வயதுடைய மூத்த பனை உழவரான திரு. அன்னச்சாமி அவர்கள் கூறியது
"என் வாழ்வில் பனைமரம் வாடி இறந்து பார்த்ததில்லை.. ஆனால் இப்போது நடக்கிறது என்றார்." அவ்வளவு வறட்சி.
பருவநிலை மாற்றம் நடைபெறும் ஒவ்வொரு சூழலிலும் #வேளாண்மை சார்ந்து வாழ்ப்வர்களின் நிலை என்ன ஆகும் என்று பார்ப்போம்.
#பனை சார்ந்த பருவநிலையின் பாதிப்புகள் :
பொதுவாக #பனை மழை நம்பிய மானாவாரி மரப் பயிர். இதற்கு தண்ணீர் தேவையில்லை என்பார்கள். ஆனால் ஒவ்வொரு பருவத்திற்கும் கிடைக்க வேண்டிய தண்ணீரோ, வெயிலோ, காற்றோ, பஞ்சபூதமோ மாறும் போது தண்ணீர் #மழை, சரியாக கிடைக்காவிட்டால் மார்கழி இறுதியில் துவங்க வேண்டிய பதநீர் அறுவடை மாறி அடுத்தடுத்த மாதங்களுக்கு நகர்ந்துவிடும்.
உதாரணமாக நல்ல பருவமழை கிடைத்தால் மார்கழியில் துவங்கி #புரட்டாசி வரை 9 மாதங்கள் பனை சார்ந்த பதநீர், கருப்பட்டி, நொங்கு மற்ற பொருட்களின் அறுவடையும் சிறக்கும். பனைசார்ந்த உழவர்களின் வாழ்வும், அதை நுகர்பவர்களின் வாழ்வும் ஆரோக்கியமும் சிறக்கும்.
ஆனால் கடந்த சில வருடங்களாக பருவமழை மாறி மாறி அறுவடை மார்கழியில் தொடங்காமல் #தை, மாசி, பங்குனி 3 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் விருதுநகர் பகுதியில் சித்திரையில் மிக மிகக் குறைவாக தொடங்கி ஆடியிலே முடிந்துவிட்டது.
8-9 மாதங்கள் நடைபெற வேண்டிய அறுவடை 3,4 மாதங்களிலே முடிந்துவிட்டது. ஏற்கனவே பனைத் தொழிலில் உள்ள ஆள் பற்றாக்குறை , #அரசு நெருக்கடி, வியாபாரிகள் நெருக்கடியோடு பருவநிலை மாற்ற நெருக்கடி இன்னும் சோதிக்கிறது.
இதே நிலை தான் பருவமழையை நம்பி வேளாண்மை நடைபெறும் #மா, #புளி, #வேம்பு, #கொடுக்காய்ப்புளி இன்னும் ஏராளமான மரப் பயிர்களின் நிலை.
#மானாவாரி குறுகிய கால உணவுப் பயிரின் நிலை :
பொதுவாக குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை உணவான #துவரை பருப்பு ( பயறு) சாகுபடி வயது 6-8 மாதம் முழுமையான விளைச்சலுக்கு. பொதுவாக ஆடிப்பட்டம் விதைத்து பனி காலம் துவங்கும் தை இறுதியிலிருந்து பனிக்காலம் முடியும் சித்திரை மாதம் வரை விளைச்சல் முன்பின் இருக்கும்.
சில மூத்த உழவர்கள் எங்கள் தாத்தா காலத்தில் #வைகாசியிலே விதைத்துவிடுவோம். துவரை மரம் போல் வளர்ந்து விளைந்து தள்ளும். துவரைக் காட்டுக்கு அறுவடைக்கு போவோம்னு சொல்லுவார்கள்.
ஆனால் பருவநிலை மாற்றத்தால் கடந்த சில வருடமாக பருவமழை மாறி மாறி சில காலம் கோடைமழை சித்திரை முழுவதும் பெய்து வைகாசி - ஆடி வரை இல்லை. சில நேரம் ஆனி ஆடியில் நன்கு பெய்து அதன் ஈரத்தில் விதைத்து புரட்டாசி, ஐப்பசி கோடைபோல் துளியும் மழை இல்லாமல் கோடை காலமாக மாறி முளைத்த துவரை வாடி கருகி மறு உழவு செய்து வேறு சாகுபடிக்கு மாறியவர்கள் ஏராளம்.
#கொரான ( நாடக) கால ஓய்வுக்குப் பின்னரான 3 ஆண்டுகள் முன்னர் சித்திரை கோடையிலிருந்து ஆவணி புரட்டாசி வரை மாதமாதம் சிறப்பான மழை. எல்லோரும் நினைத்தோம். பல மாதங்கள் சுற்றுசூழல் சீர்கோடுகளுக்கு காரணமாக தொழில் நடக்கவில்லை. ஆகையால் பருவமழை சிறந்தது. இனி நம் வாழ்வும் சிறக்கும் என நம்பினோம்.
முடிய தொழிற்சாலைகள் திறந்தன. முன்பைவிட 24 மணி நேரமும் ஏன் கூடுதல் இயந்திரங்கள் மூலம் இழந்த பொருளாதாரத்தை மீண்டு பிடித்தது. பின் ஐப்பசியில் தொடங்க வேண்டிய அடைமழையும் துவங்கவில்லை. மார்கழியில் துவங்க வேண்டிய முன் பனியும் இல்லை. மாசி பங்குனி சித்திரை பின் பனியும் இல்லை. விளைவு துவரை விதைத்தவர்கள் கார்த்திகையிலே துவரையை உழுது விட்டு அடுத்த குறைந்த வயது 90-110 நாள் கொத்தமல்லி, உளுந்து, பாசி, தட்டை, கொள்ளு, நாட்டுக்கம்பு, வென்சோளம், ஓமம், வெந்தயம், எள்,கடுகு, கடலை, சூரிய காந்தி... பயிர் சாகுபடிக்குத் தயாரானோம்.
ஆனால் முன்னரே கூறியிருந்த ஐப்பசியில் பொய்த்த #மழை கோடையில் வந்தது. விளைவு கார்த்திகையில் விதைத்ததும் பொய்த்தது.
இதே நிலை தான் நீண்ட சம்பா கால பயிர்களான இருங்கு சோளம், வரகு, மிளகாய், பருத்தியில் சோகம் தான்.
அடுத்த 2 ஆண்டுகளாகவும் வைகாசி - புரட்டாசி வரை மழை குறைவு. பெய்தாலும் வலுத்து பெய்து அதை நம்பி தொடரும் என விதைத்து அடுத்தடுத்த மழை இல்லாமல் விதையும், விதையோடு சேர்ந்த எங்களைப் போன்ற உழவரின் வாழ்வும் வெம்பி விட்டது.
அதன் பின் புரட்டாசியில் தொடங்கிய குறுகியகால 90-120 நாள் சாகுபடியும் அறுவடையும் மார்கழியில் மழை முடியாமல் தை வரை நீண்டு பெருமளவு சோசித்ததது.
கடந்த ஆண்டு #2024 தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் ஏரி, குளம், ஆறு நிறைத்து வலுத்து பெய்த மழை விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் ஏரி கூட இன்று புரட்டாசி வரை தரை பார்த்த நிலை தான்.
இன்னும் சில பகுதிகளில் கோடை உழவில் உழுத மண் கட்டிகள் உடைந்து புழுதியாகவில்லை. ஆகையால் இந்தாண்டு துவரையும், மொச்சையும், இருங்கு சோளமும், வரகும் கூட கேள்விக் குறிதான்.
இது உழவர்களுக்கு மட்டுமல்ல. உண்பவர்களுக்கும் தான். வழக்கம் போல் வெளி மாநில அல்லது நாடுகளில் இருந்து இறக்கி #வயிறு நிரப்பினாலும் விலையோ அல்லது நம் மண்ணின் சுவையோ கிடைக்குமா?
இந்த #2025ம் ஆண்டு இன்று புரட்டாசி வரை தமிழகத்தின் பெரும்பகுதி கடும் வறட்சி. விளைவு காடுகளில் வாழ வேண்டிய மயிலும் , மானும் , காட்டுப் பன்றியும், முயலும், அணிலும், சிறு குருவிகளும் குடிக்க நீரில்லாமல் வதங்கி வருகிறது. இதன் காரணமாக விளைநிலங்களில் புகுந்து தோட்டப் பயிர்களான காய்கறிகள், பழங்கள், கீரை என கிடைப்பதை உண்டு வாழ்கிறது.
வழக்கம்போல இயற்கை உழவனே தன் விளைச்சலையும், வாழ்வையும் இழந்து முடிந்தவரை பல்லுயிர்களுக்கும் தன் பட்டினியிலும் உணவளித்து வருகிறோம்.
மனிதர்களோ வழக்கம் போல் உணவு போல், தண்ணீர் போல் ஒன்றை காசு கொடுத்து வயிறு நிரப்பி நோய் பெருக்கி வாழ்கிறோம். இதை #வளர்ச்சி நம்புங்க என்கிறார்கள்.
#தீர்வு தான் என்ன?.
#உழவர்கள் :
இது சமூக மாற்றம் மூலம் நடக்க வேண்டிய பெரும் தீர்வு. அது நடந்தே தீர வேண்டும். இல்லையென்றால் விளைவு கேர முகமுடையது.
நம் கையில் நம்மால் இயன்றதை செய்து நெடுந்தீர்வு நோக்கிப் பயணப் படுவோம்.
1. நிலங்களில் #மழைநீர் சேமிப்புகளைப் பலப்படுத்த வேண்டும். ஏனெனில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிடும். அது தேக்கவும், தேவைப்பட்டால் வடிக்கவுமான அகழி, பண்ணை குட்டை போன்ற பலசேமிப்பு முறைகள்.
2. வறட்சியைத் தாங்கும் நம் #மண்ணின் மரங்களை வரப்புகளிலும் , பாதைகளிலும் உள்ளே பயிர் செய்ய ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும். ஏனெனில் பயிர்சாகுபடி மழைக் காலத்திலும், பழ மற்றும் மரப்பயிர்களின் அறுவடை வெயில் காலத்திலும் இருக்கும். இதனால் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு நிகழும் பட்சத்தில் 70சதவீதமாவது உத்திரவாதமாகும்.
3. இனி #ஒற்றைப்பயிர் சாகுபடி என்பது சூதாட்டமே. அதன் விளைவால் இன்று விளைநிலங்களை பொட்டல் நிலங்கள் ஆக்கியது தான் மிச்சம். தண்ணீர் பாய்ச்ச வசதியுள்ள நிலங்களிலும் கூட பாதி மானாவாரிப் பயிரும், மீதி குறைந்த தண்ணீர் தேவையுள்ள பயிரும், தேவைக்கு தண்ணீர் கூடுதல் பயிரும் மாற்றியமைக்கப் பட வேண்டும்.
உதாரணமாக வரப்பைச் சுற்றி தண்ணீர் குறைவான துவரை, ஆமணக்கு, அகத்தி, சவுண்டல், முருங்கை, மொச்சை, தட்டை, பருத்தி, நிழல் மரங்களும், ஊடே தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களும், அதன் பின் பழமரம் , காய்கறி, கீரை, நெல், வாழை போன்ற தண்ணீர் பாய்ச்சல் பயிர்கள் பகுதிக்கு ஏற்றவாறு, தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கலாம்.
4. ஒவ்வொரு உழவரிடமோ அல்லது குழுக்களிடமோ பல தரப்பட்ட மண்ணின் தன்மைக்கு ஏற்ற சம்பா முதல் குறுகிய கால பயிர்கள் வரைக்குமான விதைகள் சேமிப்பில் இருக்க வேண்டும். அப்போது தான் ஒரு பயிருக்கான பருவம் தவறினால் உடனே அடுத்த பருவ விதையை பயிர் செய்ய முடியும்..
அப்படி தான் மானாவாரியில் நீண்ட கால துவரை துவங்கி 55-60 நாளில் விளையக் கூடிய காடைக்கன்னி #கருந்தானியம் வரை பயிர்செய்து நம் முன்னவர்கள் காத்தும், மீண்டும் வந்தனர்.
5. பருவமழை #முன்பின் இருப்பதால் கால்நடைகளையோ அல்லது மிகச்சிறிய இயந்திரங்களோ பயன்படுத்தி விதைப்பு, நடவு, களையெடுப்பு, அறுவடைப் பணிகள் செய்யும் நிலைக்கு நம் வேலை திட்டம் வடிவமைக்கப் பட வேண்டும்.
6.. குறிப்பாக #உணவு உற்பத்திக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
7. நம்முடைய நிலத்திற்குள்ளே முடங்கிவிடாமல் வட்டார அளவில் #இயற்கை வேளாண்மையில் கைதேர்ந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் ஒவ்வொரு அனுபவ செயல்பாடுளையும் களத்திலே அவர்களோடு பணி செய்து கற்று நகர வேண்டும்.
8. குறிப்பாக #இரசாயன வேளாண்மை வறட்சியும் தாங்காது. வெள்ளமும் தாங்காது. ஆகையால் நிரந்த தீர்வு என்பது #இயற்கை வழி வேளாண்மை மட்டுமே.
இன்னும் விரிவான நகர்வுகளை நோக்கி நகர #நம்மாழ்வார் ஐயா தன்னுடைய #தாய்மண், #வாழும் கிராமம் போன்ற பல புத்தகத்தில் குறிபிட்டுள்ளார்கள். அதை அடுத்தப் பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.
#அரசும், #பொது மக்களும் :
1. ஏரி, குளம், வாய்க்கால்கள் சரி செய்யபட்டு கழிவு நீர் கலக்காமல் வேளாண்மைக்கும், குடிநீர் பயன்பாட்டுக்கு மட்டும் இருக்கும்படியாக நடைமுறை படுத்த வேண்டும்.
2. காடுகளை பாதுகாத்தால் மட்டும் தான் வனவிலங்குகள் காட்டுக்குள்ளே வாழும். ஆகையால் காடுகளை அழிக்காமல், பணப்பயிர்கள் சாகுபடி செய்யாமல் உணவுக்கும் , பல்லுயிர் பெருக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
3. வட்டாரம், மாவட்ட அளவிலான பருவநிலையை கணித்து தொடர் #முன்னறிவுப்பு செய்ய வானிலை மையங்கள் உருவாக்க வேண்டும்.
4. உழவர்களுக்கான சிறு சிறு களங்களும், எளிய வேளாண்மைக் கருவிகள் வேண்டும்.
5. பொதுமக்களும் #உள்ளூர் உழவர்களை அடையாளம் கண்டு தங்கள் தேவையை அவர்களோடு பகிர்ந்து இயற்கை வழி சாகுபடிக்கு தங்களால் இயன்ற தன்னார்வ உழைப்பை வழங்கி ஆட்பற்றாக்குறையை இயன்றவரை சரிசெய்யலாம். கண்முன்னே நஞ்சில்லா உணவை உறுதி செய்யலாம்.
6. வெளி இறக்குமதியைத் தவிர்த்து உள்ளூர் உணவுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில் இனிவரும் காலங்களில் #மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள் அதிகளவில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றை தடை செய்ய வேண்டும்.
இன்னும் இன்னும் ஏராளமான கேள்விகளும், விவாதங்களும் நடைபெற வேண்டும். நிலைத்து நீடித்த வேளாண்மைக்கும், எதிர்கால சந்ததிகளுக்கு நஞ்சில்லா சூழலையும், எந்தவித பருவநிலையையும் சமாளிக்கத் தேவையான விதைகளையும், அனுபவமானவர்களின் அனுபவங்களையும் ஆவணப் படுத்த வேண்டும்.
எனவே நம் #விதை நம் கையில் இருக்க வேண்டும். அப்போது இனிவரும் பருவநிலை மாற்றத்தையும் எதிர்கொண்டு பல்லுயிர்களுக்குமான உணவை #உத்திரவாதம் செய்ய முடியும்.
உரையாடுவோம் இன்னும் விரிவாக நன்றி..
ஜெ.கருப்பசாமி. 9443575431
