#என்_விதை...
#என்_உணவு ...
வாருங்கள் உரையாடுவோம்.
விதைகளோடும், விதைகளாய் வாழ்வபரோடும்…
பகுதி – 1
அனுபவப் பகிர்வு :
ஜெ.கருப்பசாமி (17-9-25)
இன்று உலக அளவில் #பூச்சிக்கொல்லி, #களைக்கொல்லிகள், இரசாயன #உரங்கள், #மரபணு_மாற்றப்பட்ட ( திருத்தம் செய்யப்பட்ட) விதைகளின் பயன்பாடு, நிலத்தடியில் அதிக ஆழத்தில் கிடைக்கும் நீரை சுரண்டுதல் என இயற்கைக்கு விரோதமான செயல்பாடுகள் கூடிக்கொண்டே வருகிறது. இதன் விளைவாக பச்சிளம் குழந்தைகளும் தீராத நோய்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
இதற்கெல்லாம் தீர்வாக #நம்மாழ்வார் ஐயா தன் வாழ்நாள் முழுவதும் கையில் எடுத்த #மானாவாரி ( வானம் பார்த்த சாகுபடி) வேளாண்மை தான். காரணம் குறைந்த பனி நீரிலே விளையும். மேலும் காலம்காலமாக எந்தவித பருவ மாற்றத்தையும், சூழலையும் தாங்கி மரபு அறிவைக் தன்னகத்தே வைத்துள்ளது. அவற்றுள் குதிரைவாலி, வரகு, தினை, இருங்கு சோளம், வென்சோளம், செஞ்சோளம் போன்ற பல சோள வகைகள், நாட்டுக் கம்பு, கேழ்வரகு, காடைக்கன்னி, சாமை போன்ற பல தானியங்கள், எண்ணெய்வித்துக்கள், பயறுவகைகள், மரபு நெல், கொத்தமல்லி போன்ற வாசனைப் பொருட்கள் பலபல. அவை இன்றளவும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய மரபு விதைகளே தலைமுறை தலைமுறையாக கைமாறி உள்ளது. இன்றளவும் அதே வீரியத்தோடும், ஊட்டமிகு உணவாகவும், நோய்நீக்கும் மருந்தாகவும் புழகத்தில் உள்ளது.
இன்றளவும் பெரும்பகுதி உணவுப்பயிர் விளையக் கூடிய நிலங்கள் மானாவரி நிலங்கள் தான். அவை மனிதர்கள் மட்டுமின்றி சாகுபடிக்குப் பிறகு மேய்ச்சல் நிலங்களாக கால்நடைகளுக்கும், குருவி உட்பட பல்லுயிர்களுக்கும் உணவு படைப்பவையாகவே உள்ளது.
இன்றைய சூழலில் வேலையாட்கள் கிடைக்கவில்லை என்கிற குற்றசாட்டு நிலவி வரும் வேளையில் இந்த மானாவாரி சாகுபடி “ விதைப்பு அறுப்பு ( அறுவடை) “ என்கிற தத்துவத்தைக் கொண்டுள்ளது. நம் முன்னோர்கள் நாம் இன்றுசாகுபடி செய்யும் பரப்பை விட பெரும்பகுதி நிலப்பகுதியில் வேளாண்மை செய்யதார்கள். அவை மேய்ச்சல் நிலங்கள், காடுகளை அடிப்படையாகக் கொண்டு விதைப்பு அறுவடை என்கிற தொழில்நுட்பம் மட்டுமே. அதுவும் சுழற்சி முறையில் குறுகிய காலப் பயிர் தொடங்கி நீண்ட காலப் பயிர் வரை.
முதலில் குறுகிய கால குறுவை சாகுபடி அறுவடையை முடிக்கும் போது நீண்ட சம்பா பயிர்கள் வளர்ந்து கொண்டிருக்கும். இதுபோல் சுழற்சி முறை சாகுபடி செய்து வந்தனர். இதனால் இருக்கும் ஆட்களை வைத்து முறையாக சுழற்சி முறையில் மேலாண்மை நிர்வாகம் செய்து வந்தனர்.
ஆனால் இன்றே இந்த நவீன வேளாண் சாகுபடி எல்லோரையும் பழக்கிய முறை எந்த பயிர்கள் என்றாலும் ”ஒற்றை பயிர் சாகுபடி (Mono Culture)” . அதிக பரப்பு, அதிக விளைச்சல், அதிக லாபம் என்கிற தவறான வழிகாட்டல் முறை. இந்த தவறான விளைவுகளால் வேளாண்மையை விட்டு ஓடியவர்கள் அதிகம் ( ஒருவேளை அவர்களின் சூழ்ச்சி வெற்றி கண்டு இதன் மூலம் நிலங்கள் அவர்கள் கைக்கு மாறுவது தான் என்னவோ? ).
ஆகையால் இனியெனும் விழித்துக் கொள்வோம். பலவிதமான சாகுபடி, பல்லுயிர்களுக்கான சாகுபடி. என்கிற அடிப்படையில் சாகுபடி செய்வோம். இருக்கும் மனித உழைப்பை சுழற்சி முறையில் கையாண்டு திட்டமிடுவோம். அதன் மூலம் விளைந்த்தையே உண்போம்.
இனி வரும் காலங்கள் மானாவாரி சாகுபடிக்கான காலம். நிலம் அறிந்து, பருவம் அறிந்து, விதை அறிந்து, நம் பல அறிந்து, சந்தை அறிந்து சாகுபடி செய்வோம்.
இனி வரக்கூடிய காலங்கள் எச்சரிக்கையாக உணவைத் தேர்வு செய்ய வேண்டிய காலம். மரபணு திருத்தம் செய்யப்பட்ட உணவுகள் இந்தியாவில் சாகுபடிக்கும், சோதனைக்கும் உழவர்களின் நிலங்களுக்கு திணிக்கப்பட்டுவிட்டது. இனி விழிப்போடு சரியான விதை சரியான உணவைத் தேர்வு செய்ய வேண்டிய காலம். தவறினால் நம் சந்ததிகளுக்கு நல்ல உணவையும், பூமியையும் விட்டு கொடுக்கத் தவறிய, அறநெறி வாழ்வியல் தவறிய கொடுங்கோலர்களாவோம்.
தொடர்ந்து அடுத்தடுத்த பதிவுகளில் இன்னும் விரிவாக உரையாடுவோம்.
நன்றி…
ஜெ. கருப்பசாமி இயற்கை உழவர்
#seed #விதை #நம்மாழ்வார் #சிறுதானியம் #இயற்கை #வேளாண்மை #தேன்கனி